உத்தம வில்லன் - தெய்யம்.
+++++++++++++++++++++++++
மரண செய்திவந்த ஒரு நடிகன், சாகாவரம் பெற்ற கலைஞனாக நடிக்கிறான். இந்த முரண்பாட்டில் மையம் கொண்டிருக்கும் உத்தம வில்லன், மரணத்தை எதிர்நோக்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளைப் பற்றிப் பேசுகிறது.
மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில்யுத்தம் செய்பவன் வில்லன். வில்லன் ஆங்கில வார்த்தையில்லை என்று சென்சாருக்கும் செய்திசொல்லியதிலிருந்து கமலின் புத்திசாலித்தனம் படத்தில் தெரிகிறது.
படத்தில் நாயகனின் நிஜ வாழ்க்கை கதையும், அதனுள்ளே இன்னொரு சினிமா கதையும் காண்பிக்கிறார்கள். உச்சபட்ச நட்சத்திர நடிகரின் கதையும், அவர் நடிக்கும் படத்தில் உள்ள உத்தமனின் கதையும் மாறி மாறி காட்டுகிறார்கள்.
அறுபத்தைந்து வயதிலும் கமலுக்கு முட்டி நடனத்திற்கும் முத்த நளினத்திற்கும் குறைவில்லை, இந்த ஈடுபாட்டை திரைக்கதையில் காட்டியிருக்கலாம் அதில் கோட்டை விட்டு விட்டார்கள் படம் தொடங்கியது முதல் ஒரே சத்தம் படத்திலும் தியேட்டரிலும் கமல் படமென்றாலே ஆட்டமும் முத்தமும் அவசியம் என நினைத்துக்கொண்டு இயக்குனர் படம் எடுத்துள்ளார். இந்த வயதில் தொப்பையுடன் குத்தாட்டம் எதற்கு
நாசர் மற்றும் அவரது மந்திரி கோஷ்ட்டிகளை வைத்து சிரிப்பே வாராத காமெடிகளை கோர்த்து கதை நகர்த்துகிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.
மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இந்த படத்தில் சில காட்சிகளே வந்தாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவரின் வசன உச்சரிப்பில் நாகேஷை ஞாபகப்படுத்துகிறார்.
தெய்யம்.
1500 ஆண்டுகளுக்கு முன்பாக தென்னிந்தியாவில் கேரள நடன வகைகளில் ஒன்றுதான் தெய்யம்.
போராளிகளும், ஆயுதங்களும்... இதுதான் தெய்யம் நடனத்தின் மையக்கரு. குடிவழி சார்ந்த போர் வீரர்களையும், அவர்கள் உபயோகித்த ஆயுதங்களையும் வணங்கி வழிபடுவதே தெய்யம் நடனம். தமிழிலும் சங்க இலக்கியத்தில் வேலன் வெறியாட்டல் என்ற பெயரிலும், வட இந்தியாவில் திரா என்ற பெயரிலும், கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியிலும் பூட்டா அல்லது கோலா என்ற பெயரில் வழக்கில் இருந்த அவ்வகை நடனக்கலைகள் தற்போது சிறிதுசிறிதாக அழிந்துவருகின்றன.
குடிவழி வம்சங்களின் சிறுபான்மை இனத்தவர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களான வண்ணான், மாவிலன், வேட்டுவன், வேலன், மலையன் மற்றும் புலையன் போன்ற குடிமக்கள் தெய்யம் நடனத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர். பிறகு தொடர்ந்த காலங்களில் கடவுள் வழிபாடு, மிருகவழிபாடு, வியாதிகள், நீத்தார் நினைவு கூறல், போர்வீரர்கள் முன்னோர்கள் வழிபாடு, சர்ப்ப வழிபாடு போன்றவற்றிற்காகவும் தெய்யம் நடனம் ஆடப்படுவது வழக்கமாகி விட்டது.
தெய்யம் நடனம் வழங்குதலில் தேட்டம் மற்றும் வேலாட்டம் என இரண்டு பகுதிகள் உள்ளன. ஆரம்பம் வழிபாடாக தொடங்கி இறுதியில் வீர விளையாட்டு போல் ஆக்ரோஷத்தோடு உச்ச நிலை அடைவதில் நடனம் முடிகிறது.