Monday, February 17, 2014


போதிமரம் உனக்காய்
தவமிருக்கிறது

சிலைகளுக்குள்ளே சிக்குண்டது போதும்
தற்பெருமைக்காய் கதை சொல்லி
மக்களின் கற்பனை தின்ற கயவர்கள்
அடுத்தவனுக்காய் சிந்திப்பது
அன்பின் வெளிப்பாடு
அடுத்தவனை சிந்திக்கவிடாது
செய்வது அயோக்கியத்தனம்
சுய நலத்திற்காய் கடவுளை படைத்து
ஆன்மீகத்தை அழித்த
பெரும்பங்கு கலைஞர்களுடையது

போதிமரம் தவமிருக்கிறது

படிக்கல்லாய் இருந்தாலாவது
பலர் முன்னேர படியாயிருந்திருப்பேன்
சிலையாய் வடித்து
சிறைக்குள் விட்டனரே
மூடர் கூட்டத்தின்
முதல்வனாக்கிவிட்டனர்
பாவமூட்டைகளை என்னோடு
பங்குபோடுகிறார்கள்
பிரார்த்தனைகளில் எல்லாம்
சுய நலமும், அண்டையர் அழிவும்தான்
நிறைந்திருக்கும்

எனக்கு சர்வ வள்ளமை இருந்திருந்தால்
உளி கொண்டு வலி கொடுத்தவனை
பலி கொண்டிருப்பேன்
பட்டினிப்பாயில் தேசம்
படுத்துறங்கும் போது
பாலும், பழமும்,
பன்னீரும் பனிவிடை எனக்கு குறைவில்லை

போதிமரம் தவமிருக்கிறது

கடவுள் யாரென்றால்
சிந்தனையின் தெளிவில் பதில் வரும்
எங்கும் நிறைந்தவனென்று
வணங்குவதற்கு மட்டும்
செயல் குழப்பத்தால் சிலை தேடுகிறோம்

நீயே கடவுள் நீயே புத்தன்
இல்லறத்துறவுக்கு தூய உள்ளம் போதும்
துறவி தூயவனாய்
இருப்பது எளிது
சம்சாரி தூயவனாய்
இருப்பதுதான் கடிது

போதிமரம் தவமிருக்கிறது

அடையாளங்களை அழித்துவிடு
சிலுவையும் திரு நீரும்
பிறையும் சிலைகளும்
உன்னை சிறைபடுத்தும்
சீனத்துச் சுவர்கள்

சூரியனோடு சுற்றுபவனுக்கு
இரவுவேதும் கிடையாது
தூயதாய் உள்ளமிருந்தால்
குறையேதும் இருக்காது

தரிசனம்வரை தவமிருப்பவன்
தவம்முடிந்ததும் தரிகெட்டு திரிவான்
சந்தனம் பூசி மலையேரி இறங்கியவுடன்
சாக்கடையில் வீழ்ந்துவிடும் இந்த
சந்தனப்பன்றிகள்

போதிமரம் தவமிருக்கிறது

இங்கு எல்லாம் வேசம்
எதுவும் வியாபாரம்
வேசதாரிகள் விலைபோகட்டும்
நிறைய சித்தார்தர்கள்
வரிசையிலிருக்கிறார்கள்
போதிமரம் தவமிருக்கிறது

No comments:

Post a Comment