Tuesday, March 18, 2014



இரகசியமற்ற, பாதுகாப்பற்ற, பொறுப்பற்ற
ஓர் சமூகம் வளர்ந்துகொண்டேயுள்ளது
============================

நான் பயணிக்கும் எதிர் திசைகளில்தான்
பேரூந்துகள் எப்போதும் வரிசையாய்
புகைவண்டிபோல் பயணித்து
வெருப்பேற்றுவார்கள்
நீண்ட காத்திருப்புக்கு பின்
ஓர் தொடர்பேரூந்து இரு நடத்துனரை
கொண்டது நிக்கிறவன் மேல
ஏத்துர மாதிரியே வந்து நின்றது

பின் நடுத்துனரிடம் பயணசீட்டு வாங்கி
அமர இடம் தேடி
ஓட்டுனருக்கு எதிரில் ஒற்றை
இருக்கையில் அமர்ந்தேன்.

இவ்வளவு பெரிய தொடர்பேரூந்தை
ஆட்டோ ஓட்டுவதுபோல்
ஓட்டுவதால் திரும்பி ஓட்டுனரைப்பார்த்தேன்
எனக்கு அதிர்ச்சியும் ஆச்சிரியமும்
ஒரு பள்ளிமாணவனைப்போன்ற தோற்றம்
சிறியதேகம் எங்கே இடித்துவிடுவாரோ என
ஓட்டுனருக்கு பதில் இல்லாத பிரேக்கை
மிதித்து மிதித்து எனக்கு கால்வலித்தது

நடத்துனரை விசாரித்தேன்
நீங்கவேற இந்த வண்டிய எடுக்கிறவர்
இன்று டெப்போவில இவங்கிட்ட
இந்த வண்டிய கொடுத்துட்டாங்க
எப்ப எது நடக்குமோன்னு பயத்திலதான்
நானும் இருக்கேன்

அரசு ஓட்டுனர்கள் பெரும்பாளும்
கிளட்சை மிதித்து கியரை போடுவதில்லை
அது என்னவோ இவரிடம் அடி வாங்க
தலைகாட்டுவதுபோல் கியரின்
தலையை தட்டி தட்டியே கியரை போடுவர்
இந்த இளையவருக்கும் அதையே
சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்

பொதுச்சொத்துக்களை கையாள்வதிலும்
பொது இடங்களில் நடந்துகொள்வதிலும்
நாம் இன்னும் கீழ் நிலையில்தான் உள்ளோம்.
பின்சீட்டில் இருவர் ஆளுங்கட்சியை
வருத்தெடுத்துக்கொண்டிருந்தனர்
பெரியாரின் பெயர் சொல்லி வளர்ந்தவர்கள்
தேர்தல் பிரச்சாரத்தை மாவட்டம்தோறும்
கோயிலிலிருந்தே தொடங்கியதாய் குறைபட்டார்கள்

அந்த கட்சிக்கு மட்டுமல்ல எல்லா அமைப்பு
மற்றும் நிர்வாகத்திலும் தொடங்கிய தலைவர்க்குபின்
தலைமையேற்பவரைப்பொருத்தே
தொண்டர்களின் செயல்பாடுகளும் அமையும்
அந்த இருவரும் உரக்கப்பேசுகிறார்கள்
அடுத்தவனைப்பற்றிய அக்கரையில்லை
எல்லோரது வீட்டு இரகசியங்களும்
உரக்கப்பரிமாரப்படுகிறது.
ஓர் ஆய்வு சொல்கிறது
இப்போது மனச்சிதைவு நோய் குறைந்துள்ளதாய்
தன் மனக்குப்பைகளை யாரிடமாவது
கொட்டிவிட கைப்பேசிகள் பயன்படுகிறது
வீட்டுக்குப்பைகளை தெருவில் கொட்டுவதுபோல்
மனக்குப்பைகளையும் பொதுவில் கொட்டுகிறார்கள்
நாம் தான் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்

இரகசியமற்ற, பாதுகாப்பற்ற, பொறுப்பற்ற
ஓர் சமூகம் வளர்ந்துகொண்டேயுள்ளது


நிமிர்ந்து நில்
++++++++++++

நான் திரைப்படம் பார்த்து
ஏறக்குறைய 3 வருடங்களுக்கு மேலிருக்கும்
அலுவலகம் சென்றபின்
மின்சாரவாரியத்தின் புண்ணியத்தால்
ஒரு நாள் விடுமுறை
ஓடிய கால்களுக்கு ஓய்வு என்றவுடன்
ஓன்றும் புரியவில்லை
நண்பர் பாலாதான் திரைப்படம்
செல்ல திட்டம் கொடுத்தவர்
படம் பார்ப்பதே குற்றம்
எனும் சூழலில் வளர்ந்ததால்
தயக்கத்தோடு முடிவெடுத்து
நான் கடவுள் பார்த்தோம்
மனதுக்கு நிறைவாய் இருந்தது
சமூக அக்கறையோடு
இயக்குனர் பாலா எடுத்திருந்ததால்
விழிம்பு நிலை மனிதர்களின்
துயரங்கள் இன்னும் கவணிக்கபடாமலிருப்பதால்
இவரைப்போல் நிறைய
இளைஞர்கள் வரவேண்டும்
என எண்ணியதுண்டு

ஓர் அன்பின் அழைப்பின்பேரின்
நிமிர்ந்து நில் படம் பார்த்தேன்
நல்லபடம் பார்த்த மகிழ்ச்சி
தற்கால இளைஞய இயக்குனர்கள்
சமூக அக்கரையுடன் இருப்பது பெருமிதம்
உலத்தரத்தில் தமிழ் திரைபடம்
நகர்வது மிக்க மகிழ்ச்சி
முதல்பாதி வரை
சமுத்திரம் சுனாமியாய் சுழன்றது
இடைவேளைக்குப்பிறகு
வடியும் கடல் நீராய்
வரப்புகளிலெள்ளாம் இடரி விழுந்துவிட்டது
சீரிய நோக்கோடு சென்ற திரைபடத்தில்
சிகரட் குடிக்க எழுப்பிய குத்துப்பாடல்கள்

சமுத்திரக்கனி நல்ல இயக்குனர்தான்
யாருக்காகவோ சமுத்திரம் சமரசம் செய்துள்ளார்
இருந்தும் நல்லப்படம்
அனைவரும் பார்க்கவேண்டிய பாடம்
அடுத்த படத்திலாவது
சமுத்திரம் கனி தரட்டும்

 
நீர் நிறைந்த நேச விழி
இமை துவைக்கும் உன் இழப்பு
++++++++++++++++++++++

நீ இல்லை எனும்போது
விடிவதில்லை கிழக்கு

நீ எழுதி சென்றதோடு
தொடரவில்லை எம் கணக்கு

நீ பிரிந்து சென்றபின்னே
வளர்ச்சியில்லை பிறைக்கு

சுவாசத்தில் கலந்திருக்கும்
காற்றோடும் தொடர் பிணக்கு

உன்னோடு மரித்ததாலே
மலருக்கில்லை பிறப்பு

தீராத நினைவோடு
நெஞ்சுக்குள்ளே நெருப்பு

நீர் நிறைந்த நேச விழி
இமை துவைக்கும் உன் இழப்பு

என்றென்றும் உன் உறவுகள்
தவிக்கும் இந்த தவிப்பு


அதிகார தேவனைவிட
அசுரப்பேய்கள் நல்லது
++++++++++++++++++++

பேஸ்புக்கெனும் வெளிச்சப்பேய்
பிடித்தாடும் இந்த விஞ்ஞான யுகத்தில்
பூக்களுக்கு மட்டுமல்ல
வேர்களுக்கும் விதைகளுக்குக்கூட
இங்கு இரகசியமில்லை

சுவாரசியமில்லாத
இரகசியம் மரித்த வாழ்வில்
இதையத்தை வடம்போட்டு
இணைய முச்சந்தியில் இழுத்து விட்டனர்

இருமளும் தும்மளும்
பக்கத்து வீட்டுக்காரன் பல்துலக்கல்
படுக்கையறையும் இந்த இணைய
சுனாமிகளால் இழுத்துவரப்படுகின்றன

தனிமையின் தண்ணீரில் சில்லெரிந்து
விளையாடும் விஞ்ஞான குழந்தைகள்
காற்றுக் குமிழ்களின்
கற்பத்தைக்கலைக்கும் குவிந்த உதடுகள்

வெளிச்சம்படாத எத்தனையோ
காவியங்கள் கல்லறைக்கு சென்றதுண்டு
வெளிச்சம்பட்டதால் ஓர்
கல்லறை இங்கு காவியமானது

சாஜஹானைவிட காதலை
தூய்த்தவர்கள் ஆயிரம்பேர்களுண்டு
அரசன் என்பதால் உலக அதிசயம் செய்தான்
காட்டப்படாத கண்ணியமான
காதல் இம்மண்ணில் அதிகம்

மும்தாஜ் சாஜஹானின் 7 மனைவிகளில்
4 வது துணைவி
மும்தாஜின் கணவனை கொன்ற
இரத்தத்தில் இவளுக்கு குங்குமமிட்டவன்

மும்தாஜ் 14 வது பிரசவத்தில் உயிர் துறந்தாள்
மும்தாஜின் மறைவுக்குப்பின்
அவளின் கல்லறையை கட்டுவதற்குமுன்னே
மும்தாஜின் தங்கையை கட்டியவன்

இவனின் காதல் புனிதமாய்
போற்றப்படுகிறது
பிரமாண்டங்கள்தான் இங்கு
பேசப்படுகின்றது

உண்மைகள் இங்கு
ஊமையாய் போனது
உரக்கச்சொல்லும் பொய்கள்
உண்மையாகின்றது

அரசனின் காமம்
இங்கு புனிதமாகிறது
உயிர் கொடுத்தவன் வரலாரெல்லாம்
மறந்துபோகின்றது

அவ்வைக்கு கனிகொடுத்த அதியமானும்
மயிலுக்கு போர்வைதந்த பேகனும்
முல்லைக்கு தேர்தந்த பாரியும்
தன்னைத் தேடி வந்தவர்க்கெல்லாம்
குதிரை தந்த காரியும்
நீல மணிகளையும் கலிங்கஆடைகளையும்
தந்து மகிழ்ந்த ஆயும்
நாடி வந்தவர்க்கெல்லாம்
வாரி வழங்கிய நள்ளியும்
கூத்தாடிகளுக்கெல்லாம்
நாடு தந்த ஓரியும்

தனது சம்பாதித்ததில்
28 பில்லியன் அமெரிக்க டாலர்
தந்த பில்கேட்சும்

தன் சொத்தில் 99% த்தை
உலக மக்களுக்காய் எழுதிவைத்த
வாரன் பஃப்பட்டும்
மட்டுமே பேசப்படுகின்றனர்

அரசன் மகனானதால்தான் புத்தனே
உலகிற்கு தெரிந்தான்
நாடுகள் தாண்டி அசோகமன்னன்
அவனுக்கு பரப்புரை செய்தான்

விளம்பரம் இல்லாத தாய் பால்கூட
இங்கு விஷமாகிறது
விளம்பர வெளிச்சத்தில் திருப்பதியில்
மயிர் கொடுப்பவனை ஊர் போற்றும்
தியாகத்திற்காய் உயிர் கொடுத்தோரை
உதாசினப்படுத்தும்

எளியோறுக்கும் முகம் கொடுத்த
பேஸ்புக்கேனும் வெளிச்சப்பேயே
நீ ஆடு அரசனுக்கு நிகரான வெளிச்சம்
சாமானியனுக்கும் கிடைத்ததால்
உன் மயிர்களில் ஆணி அடிக்கும்வரை
நீ ஆடு அடங்கினால் தெளிவு வரும்
நதியாய் கரை நடுவில் நடந்துவருவாய்
நுரைகொண்ட அழுக்கை
அகன்று வருவாய்
அதிகார தேவனைவிட
அசுரப்பேய்கள் நல்லது