Saturday, December 7, 2013

மனிதன் மாற்றிவிட்டான்


வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானத்தை மாற்றிவிட்டான் 
ஓசோன் கூரையில்
ஓட்டையை போட்டுவிட்டான்
காற்று முழுவதும்
கரும்புகை சேர்த்துவிட்டான்

வானில் கால்வைத்தான்
நிலவை விலைவைப்பான்

நடுக்கடல் அலையினிலே
நாட்டுக்கு எல்லைவைத்தான்

மீன் பிடிக்க வருவோர்க்கு
நடுக்கடலில் வலைவிரித்தான்

காற்றில் கலப்படம் செய்து
காதை தொலைத்துவிட்டான்

மலரும் மண்ணும் கொடியும் சோலையையும்
மாற்றித்தொலைத்துவிட்டான்

நிலைமாறாது குணம் மாறுவான்
பொய்யை நீதியென்று பேசுவான் தினம்
ஜாதியின் சங்கத்தில் கூடுவான்
பேதமே வேதமென்றோதுவான் அது
தேவனின் கவிதையாய் பாடுவான்

மனிதன் மாறவில்லை மதமும் மாறவில்லை

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
இரட்டை கோபுரத்தை எரித்தழித்தான்
பக்கத்து தேசத்தை பயப்படவைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
பாய்ந்து சென்று படையினை கொண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
பறவைகள் கொன்று கைபேசி கண்டான்
விஞ்ஞான சிலுவையில்
தானே நின்றான்
சுய நலம் கொண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறவில்லை மதமும் மாறவில்லை

இன்பமும் காதலும் செல்வத்தின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மதங்களின் மீதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் மாற்றிவிட்டானே

மனிதன் மாறவில்லை மதமும் மாறவில்லை

ஜன நாயகம் விற்பனைக்கு










சுண்டல் வாங்கியவனுக்கு சுருக்கு கயிறு
கடவுள் பெயர் சொல்லி காமம் விளையாடி
கொலை செய்தவனுக்கு விடுதலை
விசாரிக்கப்படாத சுவாமிகளெல்லாம்
வெளியே சுதந்திரமாய்

காரித்துப்புங்கள்
வெளுக்கட்டும் கருப்பாடைகள்

கடவுள், காவல், கல்வி, மருத்துவம்,
இரானுவம், பாரளுமன்றம்,
ஊடகம், உச்ச நீதிமன்றம்
எல்லாம் இந்தியாவில் தள்ளுபடி விலையில்
விற்பனையாகிறது

வசதியுள்ளவர்கள் வாங்கிவிட்டார்கள்
நாங்கள் ஓட்டுச் சாவடிகளில் கையேந்தி
கறைபடிய காத்திருக்கின்றோம்

வெளிச்ச விடியலில்


வாக்குறுதி விற்று
வசதியானவர்கள்
ஒவ்வோர் தேர்தலும்
இவர்களுக்கு ஜாக்பாட்
விளம்பர வெளிச்சத்தில்
வீதி கூட்டுவார்
வின்னோர்க்கு கேட்டிட
மேடை பேசுவார்
வாழ்க்கையை விற்று
வாங்கிய சுதந்திரம்
திருடர்கள் கையில்
சிறைபட்டுக்கிடக்குது
வெளிச்ச விடியலில்
இருட்டு விளக்கேற்றும்
ஆன்மீக அரசியல்
இருண்ட மனதில்
இருளை போக்க
விளையாட்டாய் விளக்கேற்றும்
இளசுகள்

வாழ்வு துளிர்க்கும்


கசந்தும் அது இனிக்கிறது
காய்ந்தும் அது துளிர்க்கிறது
சுமைகளாய் தொடர்கிறது
துன்பங்கண்டு சிரிக்கிறது
சூராவளியில் சுடர்கிறது
சுழலுக்குள் எழுகிறது
தோல்வியில் வெல்கிறது
இரவுகளில் விழிக்கிறது
இருளுக்குள்ளே மிளிர்கிறது
பிரிவினில் இணைகிறது
அருகிலிருந்தும் தொலைகிறது

பாலை செழித்திருக்கும்
பட்டப்பகல் குளிர்ந்திருக்கும்
பாராத முகமும்
பார்த்ததாய் நினைவிருக்கும்
பார்க்கும் முகத்திலெல்லாம்
காதல் முகம் படிந்திருக்கும்
தலையனை குடுத்தனத்தில்
தங்கமாய் கனவு வரும்
சின்னச்சின்ன நிகழ்வுகளில்
சில்லறையாய்
உயிர் துடித்திருக்கும்
வெளியே வெயிலடித்தால்
உள்ளே குடைபிடிக்கும்
கருப்பு வெள்ளைக்கூட
கலர் கலராய் கண்ணில் தோன்றும்

கசந்த பின்னே
ஐம்புலங்கள் செயலிழக்கும்
கருப்பு சூரியன்
காலையில் விடிந்திருக்கும்
முகமெல்லாம் முடிவளர்த்து
முகமூடியாய் முடிந்திராதே

தேவதைகள் தேடிவந்து
வரங்கொடுக்க ஏங்கும் மூடனல்ல
முட்டி மோதி
முளையெடுக்கும் அறிவு விதை
முயன்றவனுக்கு நாற்றங்கால்
முடங்கியவனுக்கு புதை குழி

சருகுகளுடன் சமரசம்
செய்பவனில்லை
பூக்களோடு புன்னகை செய்பவன்
நம்பிக்கையின் அதிபதி
இழந்தவனுக்கில்லை நிம்மதி!

சிகப்பாய் கிழக்கு வெளுக்கும்
இனிமை வாழ்வு துளிர்க்கும்