
நினைத்தாலே நிறை நெஞ்சில்
நெருப்பெரியும்
இமை தாண்டி விழி நீரும்
பெருக்கெடுக்கும்
மலர்ச்செடியல்ல நீ
தீச்செடி
தீயாய் பூ பூத்து
திசையெங்கும் தீ வளர்த்தாய்
வேர்களை விற்று
பூக்களாய் சிரித்திருந்தாய்
போராளியாய் இருந்த நீ எப்படி
ஞானியைப்போல் போதும் என்று முடிவெடுத்தாய்
நீ உழைத்து உருவாக்கிய உப்புக்கடல் இப்போது
கானல் நீரானதே
ஓட்டை படகில் ஊர் தேடும் எங்களுக்கு
கலங்கரையாய் உன் ஞாபகங்கள்
உன் ஞாபகமழையில்
குடைகள் கிழிகின்றன
மரங்கள் காற்றின் கறை வெளுப்பது போல் உன்
மரணம் பலரின் குறை தொடைத்ததுவே
எத்தனை செவிகளுக்கு
உன் பெயர் தேனை பாய்ச்சியிருக்கும்
குறைகொண்ட நெஞ்சங்கள்
நின் பெயர் சொல்லி நிறைந்திருக்கும்
ஆதிக்கசக்திகள் சோதிக்க நினைத்து
சாதித்து நின்ற உனை சாய்த்தேவிட்டனரே
தலை தொங்கி நின்றதனால்
வெறும் பழுதென நினைத்தனரோ
விழுதாய் தலை நிமிரும் கூட்டம்
உன் கூட்டம்
வீழ்ந்துவிட்டதனால் விறகல்ல நீ விதை
விருட்ஷமாய் வளர்த்தெடுப்போம்
நீ நிறைந்த இடம் தேடி
நெஞ்சம் பனித்திருக்கும்
வானிருந்து வாழ்த்து வரும்
விழித்துடைக்க காற்றுவரும்
திசைகள் தெரியாது
செய்வதுமறியாது
நட்டாற்றில் நின்றபோதும்
துடுப்பாய் உன் பெயர்தந்து
சாதிக்கச்சொன்னவனே
சாதிக்க காத்திருக்கோம்
உன் பெயரைக்காத்திருப்போம்
