Tuesday, October 25, 2011

கதை கேட்ட காதுகளெல்லாம் காரி துப்புகின்றன (தீபாவளி)


தீபாவளி
பூமியை சுருட்டி
கடலுக்குள் ஒளிந்த
அசுர மூடன்
(பூமிக்கு வெளியே கடலா)

கடலில் மூழ்கி
பூமியை மீட்க பன்றி அவதாரமெடுத்த
அதீத மூடன்
(கடலுக்குள் சண்டையிட பன்றியா? )

பூமியை காமம் கொண்டு பெற்ற
கடவுளின் பிள்ளைதான்
நரகாசுரன்
(கல்லைப்புணரும் கடவுள்
கடவுளுக்கு பிறந்தவன் அசுரனா)

அசுரனைப்பெற்ற அப்பனைத்தண்டிக்காமல்
கள்ளஉறவில் பிறந்த கனவனின் மகனைக்கொன்ற
கையாலாகாத பொண்டாட்டி பெண்கடவுள் !!

தலைமுறைகளை முட்டாளாய் நினைத்து
கதைச்சொன்ன முன்னோர்கள்

மகனுக்கு பதிலாய்
கனவனை கொன்றிருந்தாலாவது
அவதாரங்கள் காப்பற்றப்பட்டிருக்கும்
மதம் மீதான மானம்
மிச்சமாயிருக்கும்

தீபாவளி கதை கேட்ட காதுகளெல்லாம்
காரி துப்புகின்றன

Saturday, October 22, 2011

மன இருளை நீக்கும் மகா தீபம் ஏற்றட்டும் (தீபாவளி)


















தீய ஒலி
எதை கொண்டாடுகிறோம் என்றே
தெரியாத ஓர் தலைமுறை

காற்றை கரியாக்கி, காதை செவிடாக்கி
அடுத்தவர்மீது அத்துமீறும் ஆர்ப்பாட்டம்
அணிலும் பூனையும் அங்கும் இங்கும் ஓடி
எங்கோ ஒளிந்து கொண்டன
பறவைகள் பயத்தில்
பக்கத்து தேசத்திற்கு பறந்ததோடிவிட்டன
வீட்டுப் பெரியவர்கள் தான் செய்ததை
தலைமுறை செய்வதால் தாங்கிக்கொண்டனர்
எவன் செத்தான்னு தெரியாமலே
திரியில் தீ வைக்கும் சிறுசுகள்

சம்பளத்திற்கும் போனசுக்கும் சண்டை நடக்குது
முதலாளி வீட்டில் லட்சத்திற்கு பட்டாசு வெடிக்குது

நம் நாட்டில் மாற்று மதத்தவற்குதான்
எவ்வளவு சகிப்புத்தன்மை
தீபஒளி என்று விளக்கம் சொல்லும்
புத்திசாலிகள் வீட்டிலும் தீபம் எரியவில்லை

இருப்பவன் வீட்டு ராக்கெட்
ஏழையின் கூரையை எரித்துக்கொண்டுள்ளது

இனியாவது தீபம் ஏற்றுவோம்
ஒலியற்ற மத்தாப்பூக்கள்
எல்லோர் வீட்டிலும் பூக்கட்டும்
மன இருளை நீக்கும்
மகா தீபம் ஏற்றட்டும்

உங்களுக்காய் உழைப்பவரை மறந்துவிட்டு
பெருமைக்காக காசை கரியாக்காதீர்

Wednesday, October 19, 2011

முருங்கை விதையில் முளைத்த மூங்கில் காடே - பாரதியார்


முருங்கை விதையில் முளைத்த
மூங்கில் காடே

அக்ரகாரத்துக்கு நீ அபிஷ்ட்டு
மழித்த முகங்களுக்கிடையே
விரைத்த மீசை வைத்த வேங்கை நீ

கரும்புக்காட்டுக்கு காவல் நின்ற
இரும்புக்கோட்டை நீ
வெள்ளையனை வெளியேயும்
வறுமையை வீட்டுக்குள்யேயும்
வார்த்தை வாளேடுத்து போராடிய ராஜகவி நீ

பக்தி பழமாயிருந்த
தமிழ் கவிதைகளின் பாதை மாற்றி
கடவுளை மிரட்டிய காவியப் பாடகன் நீ

சுய நலமில்லாதவன், சூது மறந்தவன்
தமிழுக்கு வந்த தவப்புதையல்
உறவுகள் ஒதுக்கிய போதும்
காக்கை குருவிகளை சொந்தமாக்கியவன்

உயிர் பிதுக்கி ஒளி செதுக்கிய
ஓவியக்கவிஞன்
எட்டயப்புரத்து எரிமலை
மின்னல் வார்த்தைகளில்
மின்சார கவி படைத்த கவிமலை
உன் வெடிகுண்டு கவிதைகளால்
வெள்ளையனின் பீரங்கிகளையும் வேர்க்கவைத்தவன்

புதுக்கவிதையின் பிதாமகன்
சமகால கவிஞர்களின் முகவரியழித்தவன்
வள்ளுவனின் வாரிசாய்
கம்பனுக்கு பிறகு வந்த தனிகாட்டுராஜா

பாடுபொருள், பாடும்முறை மாற்றிய
சரித்திரக்கவிஞன்
உன் இறுதி யாத்திரைக்கு மனிதர்களே இல்லையாம்
வராத நாய்களை விட உனக்கு
விசிறி வீசிய ஈய்களே மேல்

நீயே கம்பீரக்கவி, ஜீவ நதி
இறந்தும் கேட்கும் உன் புகழ்ராக சுதி